search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர் தொட்டி"

    தண்ணீர் தொட்டியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள கழனிவாசலில் அரசின் சார்பில் தண்ணீர் தொட்டி புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்தப்பணியில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள மேலப்பனையைச் சேர்ந்த செந்தில் (வயது 37) என்ற கட்டிடத் தொழிலாளி ஈடுபட்டு வருகிறார்.

    வழக்கமாக இரவு நேரங்களில் புழுக்கம் காரணமாக செந்தில் தண்ணீர் தொட்டியின் மேல் பகுதிக்கு சென்று தூங்குவது வழக்கம்.

    நேற்று இரவு செந்தில் தண்ணீர் தொட்டியின் மேலே சென்று தூங்கியுள்ளார். இன்று அதிகாலை எழுந்த அவர், தூக்க கலக்கத்தில் கீழே இறங்க முயன்றுள்ளார்.

    அப்போது நிலை தடுமாறி செந்தில் தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பொள்ளாச்சி அருகே கடன் தொல்லைக்கு குடும்பமே பலியான சம்பவம் பொங்கலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பல்லடம்:

    பொள்ளாச்சியை அடுத்துள்ள நடுப்புளி அருகே உள்ள சித்தூரை சேர்ந்தவர் சதிஷ்குமார் (32). கூலி தொழிலாளி. இவரது மனைவி தவமணி (30).

    இவர்கள் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு மோனிகா என்ற 3 வயது பெண் குழந்தை இருந்தது.

    கடந்த மாதம் 1-ந் தேதி முதல் சதிஷ்குமார் குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள கவுண்டம் பாளையத்தில் உள்ள பெரியசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு குடி வந்தார்.

    அங்கு தங்கி இருந்து விவசாய வேலைகளை கவனித்து வந்தார். இந்த விவசாய தோட்டத்தில் 11 அடி உயர தண்ணீர் தொட்டி உள்ளது. நேற்று மதியம் இந்த தண்ணீர் தொட்டிக்குள் சதிஷ்குமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் குதித்தார்.

    இதில் சதிஷ்குமாரும், குழந்தை மோனிகாவும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். தவமணி மட்டும் கை, கால்களை அசைத்தபடி காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டார்.

    அப்போது தோட்டத்துக்கு வந்த டிராக்டர் டிரைவர் தவமணி தண்ணீர் தொட்டிக்குள் தத்தளிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தவமணியை மீட்டார். அப்போது அவருக்கு சுய நினைவு இருந்தது.

    இந்த நிலையில் கணவன்- மகள் தண்ணீரில் குதித்து இறந்த தகவல் கிடைத்ததும் தவமணி வேதனை அடைந்தார். அவர் கண்ணீர் விட்டு தரையில் புரண்டு கதறி அழுதார்.

    வீட்டிற்குள் ஓடி சென்ற தவமணி அங்கு தென்னை மரங்களுக்கு வைக்க பயன்படுத்தப்படும் வி‌ஷ மாத்திரையை தின்றார். இதில் அவர் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது நிலைமை மோசமானதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை 4 மணியளவில் தவமணி இறந்தார்.

    கடன் தொல்லையால் சதிஷ்குமார் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பொள்ளாச்சியில் சதிஷ்குமார் வசித்து வந்த போது சிலரிடம் கடன் வாங்கி உள்ளார்.

    அவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் சதிஷ்குமார் குடும்பத்துடன் கவுண்டம் பாளையம் வந்து உள்ளார்.

    இங்கு வந்த பின்னரும் கடன் கொடுத்தவர்கள் சதிஷ்குமார் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்ளனர். நீங்கள் தங்கி உள்ள இடம் தெரிந்து விட்டது. நாங்கள் அங்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்ளலாமா என மிரட்டி உள்ளனர்.

    இதனை சதிஷ் குமார் தன்னுடன் வேலை பார்த்து வரும் தொழிலாளர்களிடம் கூறி வேதனை பட்டு உள்ளார். இந்த நிலையில் தான் அவர் குடும்பத்துடன் தண்ணீர் தொட்டிக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லைக்கு குடும்பமே பலியான சம்பவம் பொங்கலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    முதுகுளத்தூர் அருகே தட்டானேந்தலில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியால், தண்ணீரை சேகரிக்க முடியாமல் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    முதுகுளத்தூர்:

    போக்குவரத்து வசதிகள் இல்லாத தட்டானேந்தலில் 120-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கிராம மக்களின் தண்ணீர் தேவைக்காக,  2011 ல், 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியுடன், தெருக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யும் வகையில் பைப்லைன் இணைப்புகள் அமைக்கபட்டது. 

    தரமின்றி அமைக்கபட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 2014 ல், மராமத்து செய்யபட்டது. இடிந்து விழும் நிலையிலுள்ள மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியில் மராமத்து பணிகள் மேற்கொள்ள முடியாததால், இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் சில மாதங்களாக தொட்டியில் தண்ணீர் சேகரிக்க முடியாமல், தண்ணீர் சப்ளை நிறுத்தபட்டுள்ளது. மராமத்து பணிகள் மேற்கொண்டு, 4  ஆண்டுகளுக்குள் மேல் நிலைநீர்த்தேக்க தொட்டியிலுள்ள கான்கிரீட், சிமெண்ட் பூச்சுகள் இடிந்து விழுகிறது. 
    மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அருகே உள்ள குளியல் தொட்டியில் சேகரிக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தும் கிராம மக்கள், இடிந்து விழும் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அருகே செல்ல அச்சம் கொண்டுள்ளனர். இதனால் கிராம மக்கள், குளியல் தொட்டி அருகே செல்ல முடியாமல், புழக்கத்திற்கான தண்ணீரை கூட விலை கொடுத்து வாங்கும் அவலத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 1-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆர்.பொன்னாபுரம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகள் அமுதா (வயது 7). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

    மகேஸ்வரி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து கடந்த 2 மாதங்களாக தனது மகளுடன் வசித்து வந்தார்.

    இவர் நேற்று தனது மகள் அமுதாவை பள்ளியில் விட்டு விட்டு கட்டிட வேலைக்கு சென்றார். ஜாக்டோ- ஜியோ போராட்டம் காரணமாக ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. எனவே பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

    இதனையடுத்து அமுதா வீட்டுக்கு திரும்பினார். பின்னர் வீட்டின் முன்புறம் அந்த பகுதியை சேர்ந்த சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு இருந்த தண்ணீர் தொட்டியில் மீன்களை பார்த்துக் கொண்டு இருந்த போது திடீரென நிலை தடுமாறி 7 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

    மாலை வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய மகேஸ்வரி தனது மகளை அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது மகள் அமுதா தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.

    இந்த தகவல் கிடைத்ததும் பொள்ளாச்சி தாலுகா போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புளியங்குடி அருகே தண்ணீர் எடுக்க சென்ற முதியவர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    புளியங்குடி:

    புளியங்குடி அருகே உள்ள மலையடிகுறிச்சி காந்திஜி தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது60). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் தனியாக மலையடிகுறிச்சி பகுதியில் வசித்து வந்தார். மேலும் இவர் அந்த பகுதியில் உள்ள கடைகளில் சிறு சிறு வேலைகள் செய்து அவர்கள் கொடுக்கும் உணவை வாங்கி உண்டு வாழ்ந்து வந்தார். 

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கோமதி பாண்டியன் என்பவர் புதியதாக வீடு கட்டி வருகிறார் அவர் வீட்டின் அருகே செப்டிக் டேங்க் தொட்டியில் தண்ணீரை நிரப்பி அதை மூடி போட்டு மூடி பராமரித்து கட்டுமான பணிக்கு பயன் படுத்தி வந்தார். சம்பவத்தன்று வேலுச்சாமி இயற்கை உபாதையை கழித்துவிட்டு கோமதி பாண்டியன் வீட்டில் உள்ள செப்டிக் டேங்க் தொட்டியின் மூடியைத் திறந்து தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது எதிர் பாராதவிதமாக அவர் தவறி உள்ளே விழுந்து விட்டார்.

    இதில் அவர் நீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து வேலுச்சாமியின் அண்ணன் மகன் சரவணபாண்டியன் புளியங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வருசநாடு அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    கடமலைக்குண்டு:

    வருசநாடு அருகே முத்தூத்து கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவர் தனது தோட்டத்திற்கு அருகிலேயே வீடு கட்டி விவசாயம் செய்து வருகின்றார். இவருக்கு நிதீஷ்குமார், சசிகுமார் (வயது 8) என 2 மகன்கள் இருந்தனர். சசிகுமார் கீழபூசனூத்து கிராமத்தில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். இளையராஜா தனது தோட்டத்தில் நீர் தேக்கி வைப்பதற்கு 4 அடி ஆழத்தில் தொட்டி கட்டி வைத்துள்ளர். அதில் இருந்து வீட்டின் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கும் தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.

    நேற்று காலை அந்த தொட்டியில் நீர் எடுத்து வருவதற்காக சசிகுமார் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவன் எதிர்பாராதவிதமாக தொட்டியில் தவறி விழுந்தான். அவனுக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். தண்ணீர் எடுக்க சென்ற சசிகுமாரை நீண்ட நேரம் காணவில்லை என்று இளையராஜா குடும்பத்தினர் அவனை தேடி சென்றனர். அப்போது சசிகுமார் தொட்டியில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த வருசநாடு போலீசார் அங்கு விரைந்து சென்று அவனுடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    கணவர் நடத்தையில் சந்தேகப்பட்டதால் இளம்பெண் தண்ணீர் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

    வால்பாறை:

    வால்பாறை அருகே உள்ள சோலையார்எஸ்டேட் இரண்டாவது பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மனைவி சித்ராதேவி(23).இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண்குழந்தை உள்ளது. சித்ராதேவி சோலையார் எஸ்டேட் தேயிலை தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்துவருகிறார். செல்லத்துரை சோலையார் எஸ்டேட் பள்ளிக்கூடத்தில் தற்காலிக இரவு காவலராக பணிபரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் செல்லத்துரை சித்ராதேவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி திட்டிக் கொண்டிருந்ததால் மனமுடைந்து எஸ்டேட் குடியிருப்புக்கு அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து சித்ராதேவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து தகவலறிந்து சம்பவயிடத்திற்கு சென்ற வால்பாறை போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சித்ராதேவியின் உடலை கைப்பற்றி வழக்குபதிவு செய்து வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    திருப்பூர் அருகே தண்ணீர் தொட்டியில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட சிறுமி, கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே உள்ள சாமளாபுரம் தோட்டத்து பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி தமிழ் இசக்கி. இவர்களது மகள் சுகன்யா ஸ்ரீ (வயது 2½).

    இன்று காலை வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் சிறுமி சுகன்யா ஸ்ரீ பிணமாக மிதந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நாகராஜ் உடனடியாக குழந்தையை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார்.

    குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் சுகன்யா ஸ்ரீ ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது குறித்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் உடனடியாக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சுகன்யா ஸ்ரீயின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை கொலை செய்யப்பட்டதா? அல்லது விளை£டிய போது தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்ததா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தூத்துக்குடியில் வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தபால் தந்தி காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். கூலித்தொழிலாளி. இவரது 5 வயது குழந்தை நந்தினி நேற்று வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தகரத்தை வைத்து மூடி இருந்தனர்.

    அதை கவனிக்காத குழந்தை நந்தினி தொட்டியின் மீது நடந்து சென்றாள். அப்போது எதிர்பாராத விதமாக தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டார். இதில் நந்தினி பரிதாபமாக இறந்தார். இதனிடையே நந்தினியை காணாமல் ஆறுமுகம் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.

    அப்போது தண்ணீர் தொட்டிக்குள் நந்தினி பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி சிப்காட் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×